தாய்மை அனுபவம் 26




    
     பள்ளி சென்று வரும் பிள்ளைகள் மிகவும் சோர்வடைந்து வரும். மிகவும் சோர்வடைந்து இருந்தால், 15 - 20 நிமிடங்கள் தூங்க விடவும்.
நீண்ட நேரம் தூங்கவிட்டால், இரவு தூக்கம் வராது. இரவு வெகு நேரம் முழித்திருந்தால்,காலையில் எழுவதற்கு கஷ்டப்படும். பள்ளியில் தூக்கம் வருவதால்,எல்லாமே அதற்கு புரியாமல் போகும்.

     நீங்கள் வீட்டில் இருக்கும் அம்மா என்றால்,மதியம் பள்ளி விட்டு சாப்பாடிற்கு வரும் பிள்ளைகளுக்கு உடனே சாப்பாட்டை போட்டுவிடுங்கள். அது சாப்பாட்டை சாப்பிட்டதும் ,உடனே 10 - 15 நிமிடங்கள் தூங்க வைத்து பிறகு பள்ளிக்கூடம் அனுப்பி வையுங்கள். பிள்ளைகள் சோர்வடையாது. இதுப்போல் செய்வதால்,பிள்ளைகள் மதியம் கூட பள்ளியில் உற்சாகமாக இருக்கும்.

     இதுப்போல் செய்தால், சாயுங்காலம் பிள்ளைகளுக்கு சோர்வாக இருக்காது. சில சமயங்களில் மட்டுமே சோர்வு சாயுங்காலம் வரும்.
இதுப்போல் பிள்ளைகளுக்கு 10 வயது வரை செய்யலாம். இப்படித்தான் என் பிள்ளைகளுக்கு செய்வேன்.

     உங்களால் முடிந்தால், பள்ளி விட்டு வரும் பிள்ளைளுடன்,நேராக வீட்டுக்கு வராமல்,அருகில் இருக்கும் பூங்கா அல்லது கடலோரம் சென்று சிறிது நேரம் விளையாட விட்டு அழைத்து வரலாம்.எது உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அங்கு விளையாட விடலாம். பள்ளி அருகில் பூங்கா அல்லது சின்ன இடமாக இருந்தால் கூட பரவாயில்லை. அதில் பிள்ளைகள் விளையாட ஏதாவது இருந்தால் போதும்,விளையாட விடலாம்.
இதுவும் 25 நிமிடங்கள் போதும். அதற்கு மேல் வேண்டாம்.

     மறுநாள் விடுமுறை என்றால் மட்டும் அதிகமாக விளையாட விடலாம்.
பூங்கா சென்றால் அங்கேயே ஏதாவது சாப்பிட கொடுக்கலாம்.
நேராக வீட்டிற்கு வந்துவிட்டால், வீட்டில் ஏதாவது கொடுங்கள்.

     வீட்டில் கொஞ்சம் நேரம் அது என்ன செய்கிறதோ அப்படியே விட்டு விடுங்கள். இது நமக்கு சமையல் இரவுக்கு செய்ய நேரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

     கூடுமான வரையில் இரவு சாப்பாட்டை பிள்ளைகளை பள்ளியிலிருந்து வருவதற்கு முன்பே செய்து விடுங்கள்.

     சாயுங்காலம் 6 மணியில் இருந்து பாடத்தை ஆரம்பிக்கலாம்.
இங்கு நான் பிள்ளைகளை கலர் பென்சில் கொடுத்து படங்களில் கலர் கொடுக்க செய்வேன். கலர் அந்த பட ஓரங்களை விட்டு வரக்கூடாது என்று சொல்லித்தருவேன்.

     அவர்கள் இஷ்டபடி படங்கள் வரைய சொல்லுவேன். அது என்ன் என்று அவர்களையே விளக்கம் கேட்பேன். அவர்கள் கற்பனை செய்து கதைகள் சொல்லுவார்கள். பொறுமையாக அதை நாம் கேட்க வேண்டும். கதை சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் சொல்வதை தடுக்க வேண்டாம்.

     உங்களுக்கு பிடிக்கிறாதோ இல்லையோ,நாம் ஆர்வத்துடன் கேட்க வேண்டும். நிறையா கேள்விகளும் அவர்களிடம் கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்பனை வளம் வளரும்.

     இரவில் அவர்கள் தூங்கும் முன்பு ஒரு கதை சொல்லி தூங்க வைக்கவும். கதை சொல்லி முடித்தப்பிறகு, பிள்ளைகளின் பாட்டை போட்டு விடுங்கள். அதனை கேட்டுக்கொண்டே பிள்ளைகள் தூங்கி விடுவார்கள்.

     பிள்ளைகள் தூங்கும் முன்பு பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கத்தை பிறந்தவுடனே பழக்கப்படுத்தி விடவும். 1 வயதிலிருந்து கதை சொல்லி முடிந்த பிறகு பாட்டு கேட்கும் பழக்கத்தை பழகி விடுங்கள். நீங்கள் பாடி பழகி விட்டால் நமக்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டாலும் நம்மை பாட சொல்லுவர்கள். இல்லையென்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. இது என் சொந்த அனுபவம்.



     

    உங்களுக்கு முடியும் என்றால் நீங்கள் பாடி தூங்க வையுங்கள். இல்லையென்றால்,பிள்ளைகள் பாட்டு கேசட் போட்டு பழகப்படுத்தி விடுங்கள். இப்படி பழகி விட்டால் நாம் அருகில் இருக்க வேண்டும் என்று அவசியம் இருக்காது.

     பள்ளிக்கு அவர்கள் போட்டுக்கொள்ளும் எல்லாவற்றையும் முன்நாளே எடுத்து வைத்து விடுங்கள். கடைசி நேரத்தில் நமக்கு ஒன்றும் புரியாது.

     காலையில் பிள்ளையை முன்னதாகவே எழுப்பி விடுங்கள். உதாரணமாக: பள்ளி 8:30 க்கு தொடங்குகிறது என்றால் அவர்களை 7:30 மணிக்கு எழுப்பிவிடுங்கள்.அப்போதுதான் மெதுவாக அவர்கள் கிளம்ப சரியாக இருக்கும்.

     கடைசி நேரத்தில் எழுப்பினால், அவர்களை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம்.

     அவசரப்படுத்தி சாப்பிட வைத்தால்,அவர்கள் அவசர அவசரமாக சாப்பிட முடியாமல் வாந்தி எடுக்கவும் செய்யலாம். உணவை வெறுக்கவும் செய்யலாம்.


     

     முன்பே நான் சொன்னதுப்போல் நீங்கள் அவர்களாகவே சாப்பிடும் பழக்கம் பழகி இருந்தால்,பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லும் போது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

     உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், எல்லாருக்கும் ஒன்றாக சாப்பிட சொல்லிக்கொடுங்கள். சாப்பிடும் போது அவர்களுக்குள் சண்டை போடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள். உணவு பொருள்களை வீணாக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள்.

       நான் சொன்னதுப்போல் தூங்க வைப்பது எல்லாமே செய்யவும்.

     பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே கலர் கொடுப்பது படம் வரைவது என்று சொல்லிக்கொடுத்து விட்டால், வீட்டில் அவர்கள் சத்தம் இல்லாமல் விளையாடுவார்கள். கதை புத்தகத்தை அவர்கள் வயதிற்கு ஏற்ப வாங்கிக்கொடுத்து படிக்க பழகுங்கள்.

     இப்படி வளர்த்தால்,இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் உங்களுக்கு கஷ்டமாக இருக்காது.


     

     பெரிய பிள்ளை படிக்கும் போது சின்ன பிள்ளை அதன் வேலையை செய்யும். இப்படியே பழகினால்,பெரிய பிள்ளையை சின்னது தொந்தரவு தராது. நீங்களும் பெரிய பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

       இதில் இன்னும் ஒரு சௌகரியம் உள்ளது. பெரிய பிள்ளைக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தை சின்னதும் கற்றுக்கொள்ளும்.

     தொலைக்காட்சி பார்ப்பதாக இருந்தால்,சின்ன சின்ன கதைகளாக பார்க்கவும்.அறிவியல் சார்ந்த படமாக இருந்தால் நல்லது. நீங்களும் அவர்களுடன் பார்த்து விளக்கம் சொல்ல வேண்டும்.

     ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால்,அவர்களுக்கு விளையாட்டு சாமான் வாங்குவதாக இருந்தால்,ஆளுக்கு ஒவ்வொன்று வாங்கிக்கொடுக்காதீர்கள். ஒன்று வாங்கி இருவரையும் விளையாட சொல்லுங்கள். சண்டை வராமல் விளையாட நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும்.

     முதலில் இருந்தே அதே பொருளை ஒன்றுக்கு மேல் வாங்கிக்கொடுத்து பழகி விட்டால் அதுவே பழக்கமாகி விடும். சேர்ந்து விளையாடும் பழக்கம் வாராது.



     

     எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொடுக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள். சுயநலமாக அவர்கள் மாறாமல் வளருங்கள்.

     விளையாடி விட்டு வந்ததும்,சாப்பிட போகும் முன்பும், பின்பும் கைகழுவும் பழக்கத்தை  சொல்லிக்கொடுங்கள்.

     மிட்டாய் அதிகமாக கொடுக்க வேண்டாம். சொத்தை பல் நிறைய வரும். அப்படி மிட்டாய் கொடுக்க நேரிட்டால் சாப்பிட்டு முடித்தும் வாயை கொப்பளிக்க சொல்லுங்கள். பல் விலக்கி விட்டாலும் நல்லதுதான்.
வருடத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் போய் பல் நன்றாக இருக்கிறதா? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.



     

     நடுநடுவில் பிள்ளைகளுக்கு போடும் தடுப்பு ஊசியையும் மறக்க வேண்டாம். குறைந்தது 6 மாததிற்கு ஒருமுறையாவது பிள்ளைகளின் எடை,உயரம் எல்லாம் சரிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

     பிள்ளைகளுக்கு நோய் வந்தால், உடனேவே ஆன்டிபயட்டிக் கொடுக்காதீர்கள்.நீங்களே, முன்பு இந்த நோய்க்கு இந்த ஆன்டிபயட்டிக் டாக்டர் கொடுத்தாரே என்று நினைத்து கொடுக்க வேண்டாம். அது சில நேரம் ஆபத்தை கொடுக்கும். அப்படிதான் கொடுப்பேன் என்றால்,ஒருமுறை டாக்டரிடம் தொலைபேசியில் இந்த மருந்து என்னிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு பிள்ளையின் உடம்பு இருக்கும் நிலைமையையும் எடுத்து சொல்லுங்கள்.பிறகு அவர் என்ன சொல்கிறாரோ அப்படி செய்யுங்கள்.
  டாக்டரிடம் காட்டுங்கள்.அதுதான் மிகவும் நல்லது.
  அவர்  ஆன்டிபயட்டிக் கொடுத்தாலும். அவரிடம் கேளுங்கள் இந்த நோய்க்கு  ஆன்டிபயட்டிக்அவசியமா? என்ன?என்று கேளுங்கள்.

       இந்தியாவிற்கு நான் வந்த போது டாக்டர்கள் நோய் என்று போனாலே உடனே  ஆன்டிபயட்டிக்கொடுக்கிறார்கள். அடிக்கடி இப்படிக்கொடுத்தால் உடலில் உள்ள நல்ல பக்டிரியாகள் எல்லாம் செத்து விடும். நோய் தடுப்பு சக்தி போய்விடும்.

     அவசியம் என்றால் மட்டுமே கொடுக்கலாம்.சிலருக்கு மருந்து இப்படி கொடுத்த உடனேயே நோய் போய்விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
அது உள்ளே போய் வேலை செய்ய வேண்டாமா? அதை யோசிக்க வேண்டும்.

இப்போவே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எப்படி? மீண்டும் சந்திக்கிறேன்.
copyright©Oct2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts