தாய்மை அனுபம் 31






     6 வயதில் நம் குழந்தையை தொடக்க பள்ளியில் சேர்க்கும் நேரம். பள்ளியிலிருந்து குழந்தை வந்ததும், இன்னைக்கு வகுப்பில் என்ன நடந்தது.? என்ன பாடம் நடத்தினர்கள்?என்று கேட்காதீர்கள்.

     அப்படிக்கேட்டால், பல பிள்ளைகள் பள்ளி என்றாலே படிப்புத்தான்  என்று பள்ளியை வெறுக்க ஆரம்பிப்பார்கள். அதனால், படிப்பைப்பற்றி அவர்களே சொல்லட்டும் என்று விட்டு விடுங்கள்.

     மற்றப்படி, நீங்கள் அவர்களின் நண்பர்களை பற்றி கேளுங்கள். அவர்களின் பெயர்களை கேளுங்கள். அவர்களுடன் என்ன விளையாட்டு விளையாடினாய் ? என்று கேளுங்கள்.

      அவர்களின் நண்பர்களிடம் என்ன என்ன விளையாட்டுகள் நாளைக்கு விளையாட போகிறார்கள் என்று கேளுங்கள். பள்ளியிலிருக்கும் விளையாட்டு மைதானதில் என்ன விளையாட்டுகள் இருந்தது? என்றும் கேட்கலாம்.



       

      வீட்டிற்கு வந்ததும், ஒரு வெள்ளை தாளும் கலர் பென்சில் ஏதாவது கொடுத்து,உன்னுடைய வகுப்பறை வரைந்துக்காட்டு, நான் உன்னுடைய வகுப்பரை, உன் நண்பர்கள் எல்லாம் பார்க்க ஆசையாக இருக்கிறது.

      அப்படியாவது அதையெல்லாம் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்.
அவர்கள் வரையும் படத்தை பார்த்து அவர்களின் விருப்பு வெறுப்பகளை தெரிந்துக்கொள்ளலாம். அப்படியே, அவர்கள்  நண்பர்களுடன் எப்படி விளையாடினார்கள் என்று வரைய சொல்லுங்கள்.

       வரைஞ்ட்டியா? நல்லா வரைந்திருக்கிறாய். அழகாக வரைத்து இருக்கிறாய். இப்படித்தான் இன்னைக்கு நடந்ததா? வரைந்த அந்த ஓவியத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

      கொஞ்சநாள் சென்று அதே கேள்வியை கேட்டு வரைய சொல்லுங்கள். அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
கண்டிப்பாக அவர்களின் மனநிலை எல்லாம் மாறியிருக்கும்.

      உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூட பஸ்ஸில் போக நேரிடலாம். அப்படி ஒரு நிலையிலிருக்கும் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது இதைதான்: பஸ்ஸில் ஏறும்போது வேகமாக ஏற வேண்டும் என்று முட்டி மோதிக்கொண்டு ஏறினால்,பஸ்ஸில் இருக்கும் படிக்கட்டை கவனிக்காமல் காலை எங்காவது வைத்து, கீழே விழ  நேரிடலாம். பிறகு காயம், மருத்துவமனை தேவையா? இதுவெல்லாம்.

      
      அதே மாதிரி  இறங்கும்போதூம் பார்த்து இறங்க வேண்டும். ரோட்டில் தனியாக வரும்போது கார் ஏதாவது வருகிறதா என்று பார்க்க வேண்டும். 

      அது மட்டும் கிடையாது. பார்க்கிங்கில் கார் வந்தாலும் சரி வேறு இடத்திலும் சரி காரின் பின்னால் நிற்கக்கூடாது.




      திடீரென்று கார் பின்னால் வர நேரிடும். அதனால் தான் இதையெல்லாம் பார்க்க வேண்டும். உருவம்  சின்னதாக இருப்பதால், கார் ஓட்டியின் கண்ணடியில் தெரிய வாய்ப்பில்லை.

     இன்றைய நாட்களில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போவதால், பல பிள்ளைகள் தனியாக பள்ளியின் பஸ்ஸில் போவது கட்டாயமாக இருக்கிறது.

     இதையெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அனுப்புங்கள். என் பிள்ளைகளை தனியாக பள்ளிக்கு என்றுமே அனுப்பியது கிடையாது. உயர்நிலை பள்ளியிலிருந்து தனியாக போவது கட்டயமாக இருக்கிறது.

      என் பெரிய பெண் தனியாக உயர்நிலை பள்ளிக்கு போனபோது நான் மிகவும் பயந்தேன். அது ரோட்டை ஒழுங்காக கடக்க வேண்டுமே . பல ஆபத்துகள் வரும் என்று பயந்தேன்.

      முன்பே சொல்லியிருக்க்கிறேன், குழந்தைகளின் கண்பார்வை சரியாக தெரிய ஆரம்பிப்பது 11, 12 வயதிலிருந்துதான்.



      

     அதனால்தான் அந்த பயம்.  இந்த பயம் இருந்ததால், கேடைவிடுமுறையிலிருந்து அதற்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.  ரோட்டை கடக்கும் போது, சிக்னலில் பச்சை விளக்கு எரியும் போது, அந்த ழிப்ரா மாதிரி கோடு போட்டு இருக்கும் நடைப்பாதையில் நடந்த்து ரோட்டை கடக்க வேண்டும்.

     சிகப்பு விளக்கு எரியும் போது ரோட்டை கடக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து, தனியாக எதிர்புறம் அதை நிற்க வைத்துவிட்டு நான் இன்னொரு பக்கம் நின்றுகொண்டு ரோட்டை கடக்க பயிர்சி கொடுத்தேன்.



    

      இது மட்டும் பத்தாது. அவர்களுக்கு பயத்தை போக்க வேண்டும். உன்னால் தனியாக எல்லாம் செய்ய முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்க வேண்டும்.

     உங்கள் குழந்தை தனியாக வீட்டில் விட்டு விட்டு போகும் போது, அவசரமான தொலைபேசி எண்ணை கொடுத்து வையுங்கள். உதாரணமாக: அவசர போலிஸ், தீய் அணைக்கும் படை எண்,முக்கியமான நண்பர்களின் எண், உங்கள் எண்ணும் கூட. 

     இவையெல்லாம், ஒரு அவசரத்திற்கு உதவும். 

      தனியாக போகும் பிள்ளைக்களுக்கு மட்டும் கிடையாது பள்ளிக்கு போகும் சின்ன சிட்டுகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் போட்டு அனுப்பாதீர்கள். காணாமல் போனால் வீணாக திட்டு .
  
     இது வேண்டுமா? தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு பிள்ளைக்கு திட்டு.
  
      என்ன இது இப்போதெல்லாம் வெறும் பிள்ளைகளின் பள்ளி,படிப்பு இப்படியே எழுதுகிறேன் என்று திட்டுகிறீர்களா? இந்த வயதில் பள்ளி, படிப்புத்தானே தொடக்கம் ஆகிறது.

     கொஞ்சம் பிள்ளைகளின் மனநிலையை பற்றியும் பார்ப்போம்.

      இந்த வயதில் பிள்ளைகளுக்கு எல்லாமே புரிய ஆரம்பிக்கும். ஆனால், பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருந்தாலும். அவர்கள் மனதில் ஆழமாக பதியும்.இல்லை இல்லை, ஆழமாக பாதிக்கும் நிகழ்வுகள்தான் அதிகம்.

      நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். என் அப்பாவிற்கும் அவர்களின் அண்ணனுக்கும், எல்லா அண்ணன் தம்பிகளுக்கு வரும் சொத்து  தகராறுதான்.

      இதில்  அதிகமாக பாதிக்க பட்டது நான் தான். அந்த நிகழ்ச்சி என் மனதை விட்டு இன்றும் அகலவே இல்லை. அவ்வளவு பெரிய வீட்டில் என் பெற்றோரும்,அப்பாவின் மாமா,நான்  எல்லோரும் 2 அறையில் தான் இருக்க வேண்டும். அதிலேயே சமைப்பது, தூங்குவது எல்லாம். வெளியே சென்றால் வீணாக தகராறுதான் ;

      நான் ஆறு மாத குழந்தையாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். தவழும் வயதுதான். அப்போது நாலுக்காலில் நடந்துச்சென்று எங்கள் அறையின் எதிர் அறையில் அப்பாவின் அண்ணனின் மனைவி, பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை நோக்கி போனேன். 

     அங்கு ஒரு சின்ன அலமாரி(நகை வைக்கும் அலமாரி) இருந்தது,அதனை  பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கிறேன். அப்போது யார் என்று நினைவு இல்லை. என் ஒரு கையை பிடித்து அப்படியே தூக்கி எரிந்ததில் தாவரத்தில் வந்து விழுந்தேன். 

     என் அழுக்குரல் கேட்டு அடுப்பக்க்ரையில் வேலை செய்துக்கொண்டிருந்த என் அம்மா வந்து என்னை தூக்கிக்கொண்டு எங்கள் அறை வாசப்படியில் வைத்துக்கொண்டு, இனிமேல் இந்த வாசப்படியை விட்டு போவியா? போவியா என்று காலிலேயே அடித்தார்கள்.

       அன்றிலிருந்து நான் அந்த படியை தாட்டியதே கிடையாது.
அம்மா ரொம்போ வெளியே வரமாட்டார்கள், வெளியே போவது என்றால், வேலைக்கு பள்ளிக்கூடம்  அல்லது பொருட்கள் வாங்க கடைக்கு போவர்கள்.



       

     வெளியே கூடத்தில் பெரிய ஊஞ்சல் இருக்கும். அதில் ஆட ஆசையாக இருக்கும். அப்பா வந்ததும் அவர்களுடன் தான் போய் ஆடுவேன். அப்பா வந்தால் தான் அறையின் வெளியே வருவேன்.
இது என் அம்மா சொல்லியோ வேறு யார் சொல்லியும் என் மனதில் பதியவில்லை. என்னால் அதை மறக்க முடியாது,மறக்கவும் இல்லை ஆயிரம்தான் எனக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் வந்திருந்தாலும், இது என் மனதை விட்டு போகவே மாட்டேன் என்கிறது.

     அடுத்தது, என் அம்மாவின் அப்பாவின் நினைவு. எனக்கு நாலு வயதில் இறந்தார்கள்.

      நான் பள்ளிக்கூடம் போவதிற்கு முன்பு நடந்தது இது. 3 வயதுக்குள்). தாத்தா கடைக்கு போய்விட்டு வாருவார்கள். கீரை, மரக்கறி .. வாங்கி வருவார்கள். நான் உடனே போய் அதை நான் தூக்கிக்கொண்டு போகிறேன் என்று கேட்பேன். அவர்கள் நடையில் சைக்களை நிறுத்திவிட்டு, இதை எடுத்து போய் அம்மாசியிடம் கொடுக்க சொல்லுவார்கள்.

      என்னால் பையை தூக்க முடியாது. அதனால், அலிபாபாவில் காசிம் மூட்டையை இழுத்துக்கொண்டு போவது போல் இழுத்துக்கொண்டு போய் அம்மாச்சியிடம் அடுப்பங்கரையில் கொடுப்பேன். எனக்கு தினமும் ஒரு பிரிட்டானியா பிஸ்கெட்  அப்போது பாக்கெட் பெரியதாக இருக்கும் . இப்பொ அதுமாதிரி பிஸ்கெட் எல்லாம் கிடைப்பதுக்கிடையாது.
அந்த பிஸ்கெட் பாக்கெட் ஒரே நாளில் முடிந்து விடும். 

      அவ்வளவு பசி ஆள் நான் என்று நினைக்கிறீர்களா?அதுதான் கிடையாது. அதை எல்லோருக்கும் பங்கு பிரித்துக்கொடுப்பேன். அம்மாச்சி வீட்டில் மாடு,கோழி,நாய் கிளி எல்லாம் இருக்கிறதே அதற்கு யார் பிஸ்கெட் கொடுப்பார்கள். அதனால், எல்லோருக்கும் கொடுப்பது? நான் தானே கொடுக்க வேண்டும். அதனால்தான் ஒரே நாளில் ஒரு பிஸ்கெட் பாக்கெட் காலி.

     

     தாத்தா செத்த அன்று எனக்கு அவ்வளவாக மனம் கஷ்டமாக இருந்ததா? இல்லையா என்று நினைவு இல்லை. அடக்கம் செய்ய வெளியே எடுத்துவரும்போதும் எனக்கு ஒன்றும் புரிய வில்லை என்று நினைக்கிறேன்.நானும் என் சித்தியும் வீட்டின் திண்ணையில் ஏறி நின்றுக்கொண்டு இருந்தோம். 

      எல்லோரும் அழுவதும் எனக்கு புரியவில்லை. சித்தியிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன்.

      சித்தி என்னிடம் தாத்தா இனிமேல் வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். உடனே நானும் அழுவ ஆரம்பித்தேன். தாத்தா இறந்ததிற்கு என்று நினைக்கிறீர்களா? அதுதான் கிடையாது. இனிமேல் எனக்கு தினமும் பிஸ்கெட்  பாக்கெட் தாத்தா வாங்கிக்கொடுக்க மாட்டார்களே. அதை நினைத்து தான் அழுதேன்.

      அதற்கு பிறகு, நான் உடம்பு சரியில்லாமல் போனது எல்லாம் அம்மா சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனால், அம்மா எவ்வளவுதான் பிஸ்கெட்,மிட்டாய்கள் வாங்கிக்கொடுத்தாலும் தாத்தா வாங்கிக்கொடுப்பதுபோல் இல்லை.

     என் சொந்த கதை சோக கதையை ஏன் சொல்கிறேன் என்றால், இப்படி தான் பிள்ளைகளுக்கு மனம் பாதிக்கக்கும் என்று சொல்லதான்.

     வீட்டில் சண்டை சச்சரவுகள், ஒரு மரணம், வீட்டில் நடக்கும் 
மாற்றங்கள்:வீடு மாறுவது,வீட்டில் ஏற்படும் 




விபத்துகள்,விவாகரத்து,மறுக்கல்யாணம்,வேலை இழப்பு... இப்படி பல. இதனைப்பற்றியும் மேலும் பல வரும் தொடர்களில்
பார்ப்போம்.



காத்திருங்கள் அடுத்த..
copyrightMai2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts