தாய்மை அனுபம் 27





      ஐந்து வயது பிள்ளைகள்  நன்றாக பேசுவார்கள். 

     நிறைய சொற்கள் அவர்களுக்கு தெரியும். புதுபுது வார்த்தைகள் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

      சில வார்த்தைகளை சரியாக சொல்லவாராது. ஸ்,ஸ,ழ,ஷா, போனறவைகள் சரியாக உச்சரிக்க சரியாக வராது. நிறைய பெற்றோர்கள் இதனை திருத்தாமல்,தானாக  திருந்தட்டும் என்று விட்டு விடுவார்கள்.

      சில பிள்ளைகள் தானாக திருந்தி விடுவார்கள்.
பல பிள்ளைகளுக்கு இது சரியாக வராது.அதனால்,அவர்களின் உச்சரிப்பை ஆரம்பத்திலேயே திருத்தி விடுங்கள்.

      அது போலவே எல்லாருக்கும் மரியாதை கொடுக்கவும. சொல்லிக்கொடுங்கள். பிறகு தானாகவே வந்துவிடும் என்று விட்டு விடாதீர்கள்.

      ஐந்து வயதில் பேசும் போது அழகாக ரசிக்கும்படி இருக்கும். 
இதுவே வளர்ந்து 15 வயதில் இதனைக்கூறினால் நம் மனதே கஷ்டப்படும்.பிறர் நம் பிள்ளைகளை குறைக்கூறும் போது நம் மனது கஷ்டப்படும். 
     
     ஆனால்,எப்போதுமே குறை மட்டுமே பேசுபவர்கள் வார்த்தைகளை பொருட்படுத்த வேண்டாம்.

      வீட்டில் திட்டும் பழக்கம் இருந்தால் வார்த்தையை கொஞ்சம் கட்டுமானப்படுத்தி பேசவும்.ஏன் என்றால் அந்த வார்த்தைகள் திரும்பி உங்களுக்கே வரும்.

     அதுப்போலவே பள்ளிக்கூடத்திலிருந்தும் நிறைய வார்த்தைகள் கற்றுக்கொண்டு வருவார்கள். அதை உடனே திருத்தி விடுங்கள். இது தானாக திருந்திவிடும் என்று விட்டு வீடாதீர்கள்.

     என்ன ? எப்போதும் திருத்திவிடுங்கள் திருத்திவிடுங்கள் என்று சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அதற்கு தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? இதற்கு மேல் நான் புதியதாக என்ன சொல்லுவது!

     பிள்ளைகளுக்கு நல்ல வார்த்தைகளை விட  திட்டும் வார்த்தைகள் மிகவும் ஈர்கிறது.

     சாப்பிடும் போது எங்குப்பார்த்தாலும் இரைத்து கொண்டு சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. இதை நாம்தான் சரிசெய்ய வேண்டும்.

     தட்டை சுற்றி உணவுகள் இரைக்க கூடாது என்றும்,கை முழுதும் படும்மாறு சாப்பிடக்கூடாது என்றும் கூறவேண்டும். உண்ணும் உணவு உள்ளங்கை வரை வரக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள்

     சாப்பாடு சாப்பிடும் இடத்தில் சாப்பாடு மட்டும்தான் இருக்கவேண்டும். விளையாட்டு பொருட்களுக்கு அங்கு இடம் கிடையாது என்று அன்புடன் சொல்லிக்கொடுங்கள்.

     எப்போதும் டி.வி முன்பு உட்கார்ந்து சீரியலும்,
கார்டூனும் பார்த்துக்கொண்டே இருக்க விடாதீர்கள்.

      வேலைக்கு செல்லும் பெற்றோர் என்றால்,கொஞ்சம் கஷ்டம்தான். நீங்கள் இல்லாத நேரத்தில் பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள்.

     இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு தேவையில்லாத நிகழ்ச்சிகளும் உள்ளன. 

     அதை விட கம்யூட்டரில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் காலக்கட்டதில் இன்டர்நெட் ஒரு பெரிய இடையூராக இருக்கிறது பிள்ளைகளின் வாழ்க்கைக்கு.


    

      இன்டர்நெட் என்பது ஒரு நல்ல தகவல் தெரிந்துக்கொள்ளவும், அதிக தொலைவில் இருப்பவர்களுக்கு ஒரு தூதுவனாகவும் இருக்கவும் இன்னும் நிறைய பயன்கள் தரும் ஒரு உபகரணம்.

     அதுவே கெட்டதாகவும் ஆகிறது . எதுவும் நாம் உபயோகிப்பதில் தான் இருக்கிறது.

      பிள்ளைகளுடன் எல்லோருமாக அறிவு வளர்க்கும் விளையாட்டாக விளையாடுங்கள்.

     முன்பு விளையாட்டு என்றால்,பல்லாங்குழி,ஒத்தையா?இரட்டையா?,பரமப்பதம், செஸ் போன்ற  விளையாட்டுகள் கணக்கு போட உதவும்.

       விடுகதைகள்,கதையில் விடுகதை அறிவு வளர
பழமொழிக்கதைகள், விக்ரமதித்தன் கதைகள் எல்லாம் கதையை விடுவிக்கும்  கதைகள். இது எல்லாம் யோசிக்க வைக்கும் கதைகள்.

     இப்போது நிறைய குடும்பமாக விளையாடும் விளையாட்டுகள் கிடைக்கிறது.

      Business trade,Monopoly, இன்னும் நிறைய விளையாட்டுகள். இதுமாதிரி விளையாட்டுகள் விளையாடும் போது பிள்ளைகளுக்கு கோபம் வருவது அடங்கும். மற்றும் கற்பனை திறன்கள் வளரும். இவையெல்லாம் அமைதியான விளையாட்டுகள்.

     வீடியோ கேம்ஸ்,கம்யூட்டர் எல்லாம் மூளையை பாதிக்கும். உற்றுப்பார்பதினால் கண்ணும் பாதிக்கும். 

      கையால் தொட்டு விளையாட வேண்டும்.
அதனால்தான்,Puzzles, போன்ற விளையாட்டுகள் குடும்பத்துடன் விளையாடுங்கள். பழைய காலத்து விளையாட்டு சொல்லிக்கொடுப்பதும் மிகவும் நல்லது.

     வாரத்திற்கு ஒருமுறையாவது பிள்ளைகளுடன் அனைவரும் உட்கார்ந்து விளையாடுங்கள்.

     இங்கு யாராவது விருந்திற்கு வந்தால் அல்லது நாங்கள் நண்பர்களின் வீட்டிற்கு சென்றாலும் சரி மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் உலாவ போய்விட்டு வருவோம் அல்லது சிறிது நேரம் விளையாடுவோம். அல்லது இரண்டையுமே செய்வோம்.


     

      இப்படி செய்வதால் பிள்ளைகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால்,விருந்தினர் வருகிறார்கள் என்றால் நிறைய வேலைகள் இருக்கும். 
      
       
      சும்மா சும்மா பெரியவர்களே பேசி பேசி பிள்ளைகளை அன்று கொஞ்சம் கவனிக்காமால் இருப்போம். இப்படி நாம் செய்வதால், பிள்ளைகள் விருந்தினர்களிடம் அன்பாக பழகுவார்கள்.

     பெண் குழந்தைகள் என்றால் நிறைய பொம்மைகளுடன் விளையாட ஆசைப்படுவார்கள். 

       ஒரு குறிப்பிட்ட வயதுவரை பொம்மையை விளையாடுவது நமக்கு பிடிக்காத வகையாக இருக்கும்.

     அதாவது, பொம்மையின் சட்டையை கழற்றி போட்டு விடுவார்கள். பொம்மையின் முடியை வெட்டி விடுவார்கள். குளிப்பாட்டி விடுவார்கள்.
பொம்மையின் சட்டையை திரும்பவும் போட முயற்சி பல பிள்ளைகள் செய்வது இல்லை.

     பெரியவர்கள் அதன் உடையை திரும்பவும் போட்டாலும்  திரும்பவும் கழற்றி போட்டு இருப்பார்கள். கோபம்தான் மிஞ்சும்.


     இதனை சொல்லும் போது என் பெரிய பெண் செய்தது நினைவுக்கு வருகிறது. 

     என் பெண் இது மாதிரி செய்ய தொடங்கும் பருவத்தில், என் அம்மாச்சி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் உடனே அந்த பொம்மையை எடுத்து என் மகளுடன் அதற்கு சட்டை தைத்து போட்டார்கள். இது நிறைய கேள்விகள் கேட்க கேட்க அதற்கு பதில் சொல்லிக்கொண்டே தைத்து கொடுத்தார்கள். அதிலிருந்து அது பொம்மைகளின் உடைகளை கழற்றி போடுவது இல்லை.

     இங்கு ஒரு நண்பரின் பிள்ளை ஒரு பர்பி பொம்மையை ஹீட்டரில் 
போட்டு காய வைத்துக்கொண்டு இருந்தாள். 



     

இது ஏன் இப்படி காய்கிறது?  என்று கேட்டால், அவர்கள் வீட்டிலிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த பெண்  எப்போதும் தலை முடியை வெட்டி விட்டு Shampoo போட்டு காயவைத்து கொண்டு இருக்கிறது. அந்த பொம்மை அன்றுத்தான் அந்த பெண் குழந்தைக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதன் பிறந்தநாள் பரிசு இப்படி காய்ந்துக்கொண்டு இருந்தது.

     பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். ஆனால், அதிகமாக வேண்டாம். எதில் விளையாடுவது என்று அவர்களே குழம்பி போய்விடுவார்கள். நீங்களும் அவர்களுடன் விளையாடும் எண்ணம் இருக்கும் என்றால் வாங்கிக்கொடுங்கள்.


இன்னும் வளரும்
CopyrightNov2014©kollywood.blogspot.com

Comments